கருணாநிதி செய்தது சரியா?தொடர்ந்து ஏமாற்றப்படும் தலித் கிறிஸ்தவர்கள்
தலித் கிறிஸ்தவர்கள் தங்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும் என கடந்த அறுபது ஆண்டுகளாக அரசியல் மற்றும் சட்டபூர்வமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.தொடர்ச்சியாக அதிகமான ஏமாற்றங்கள்! ஏராளமான வலிகள்! இருந்தும் மனவலிமையுடன் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.408 கோடி ஆகும்.அதாவது மொத்த இந்திய மக்கள் தொகையில் 2.34%.அதில் இந்தியா முழுவதும் 1.6 கோடி தலித் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.அதாவது ஏறக்குறைய 66% சதவிகிதம் பேர். இந்திய கிறிஸ்தவ மதம் சாதி முறையை போதிப்பதில்லை என்றாலும் நடைமுறையில் ஜாதிய முறைகளையே பின்பற்றுகிறது.இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை என்னவோ, அதே தான் கிறிஸ்துவ மதத்திலும் அவர்கள் நிலை.
வரலாற்று பூர்வமாக, இந்து மதத்தில் உள்ள இழிநிலையில் இருந்து தங்களை காத்துக்கொள்ளவே தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் கிறித்துவத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும் மாறினார்கள்.ஆனால் அங்கும் அவர்களின் சமூக,பொருளாதார மற்றும் கல்வி நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.தீண்டாமை என்ற இழிநிலைக்கு அங்கும் விடுதலை இல்லை.
தலித் சீக்கியர்கள் 1956-ஆம் ஆண்டும், தலித் புத்த மதத்தினர் 1990-ஆண்டும், தாழ்த்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டார்கள். காரணம்! புத்த மதமும், சீக்கிய மதமும் இந்துமதத்தில் இருந்து தோன்றியவை என்பதால் இங்குள்ள தலித்துகளின் கோரிக்கைகள் காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.ஆனால் தலித் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் இதுவரை பாராபட்சம்.காரணம்!கிறிஸ்துவமதம் அடிப்படையில் சாதியம்(வர்ணாசிரம தர்மம்) போதிப்பதில்லை;ஆனால் சமத்துவத்தை வலியுறுத்துகிறது.அடிப்படையில் இதன் தோற்றமும் இந்தியா அல்ல என்பதும் ஒரு காரணம்.
சங்க பரிவாரங்கள் தலித் கிறித்துவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்ப்பதற்கு காரணம், அது இந்து மதத்திலிருந்து மத மாற்றத்தை இன்னும் வேகப்படுத்தும் என்ற பயமே!
கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள தென்னிந்தியாவிலும், ‘மதசார்பற்றவர்கள்’ என மார்தட்டிக்கொள்ளும் அரசுகள் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை. ஒரே ஒரு சலுகை, அதாவது கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும்(தலித் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் அடக்கம்) பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் நீண்டகாலமாக இணைக்கப்பட்டுள்ளார்கள்.
மத்திய அரசும் இவர்களை 1993-ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% சதவிகித இடஒதுக்கீட்டில் இணைத்துள்ளது.இருந்தும் இதில் யார் அதிகம் பயன்பெறுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.பி.ஜே.பி-யையும், காங்கிரசையும் தவிர மற்ற தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் அனைத்தும் தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளன.ஆனாலும் அனைத்துக் கட்சிகளும் இதில் வேகம் காட்டவில்லை எனபதும் உண்மை.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என முதலமைச்சர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தலித் கிறிஸ்தவர்கள்.தி.மு.க. அரசு கிறிஸ்தவர்களுக்கு 3.5% சதவிகித இடஒதுக்கீடு கொண்டுவந்தபோது கிறிஸ்தவர்களில் உள்ள ஒரு ஆதிக்க பிரிவினர் தாங்கள் ஏற்கனவே 3.5%சதவிகிதத்திற்கும் அதிகமான வாய்ப்புகளைப் பெறுவதால் பிற்படுத்தப்பட்ட பிரிவிலேயே இருக்கிறோம் என கூறிவிட்டனர்.ஆனால் முதலமைச்சர் கருணாநிதி என்ன செய்திருக்கலாம்?அதில் ஒரு இரண்டு சதவிகிதமாவது தலித் கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்கி இருக்கலாம்.மதரீதியான இடஒதுக்கீடு வழங்குவது என முடிவாகிவிட்ட நிலையில் தாழ்த்தப்பட்டவர்களில் அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு இருப்பதைப்போல தலித் கிறிஸ்துவர்களுக்கு அந்த 3.5% சதவிகிதத்தில் ஒரு இரண்டு சதவிகிதமாவது வழங்கி இருக்கலாம்.இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரியாக இருந்திருக்கலாம்! ஒரு நல்ல வாய்ப்பை நழுவவிட்டு விட்டார்கள்!
இன்று பிரதமருக்கு கடிதம் எழுதுவதெல்லாம் அவர் செய்திருக்க வேண்டியதைவிட செய்திருக்கும் சிறிய செயலாகவேபடுகிறது!
சூஸை வர்ஸஸ் உனியன் ஆஃப் இன்டியா உச்சநீதிமன்ற தீர்ப்பை வாசிக்கவும்.
தாங்கள் கூறியுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை நானும் படித்தேன்.இந்து மதத்தில் போதனையும் நடைமுறையும் ஒன்றாக உள்ளது.ஆனால் இந்திய கிறித்துவ மற்றும் இஸ்லாம் மதங்களில் போதனை ஒன்று நடைமுறை வேறாக உள்ளது.இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களும் நடைமுறைக்கு இந்துமத கோட்பாடுகளையே உள்வாங்கி செயல்படுகின்றன.இதுவரை அமைக்கப்பட்ட தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான கமிசன்களாகட்டும், அல்லது பிறகு அமைக்கப்பட்ட மிஸ்ரா கமிட்டி ஆகட்டும் அனைத்தும் தலித் கிறிஸ்த்துவ மற்றும் இஸ்லாம் மக்களின் நடைமுறை வாழ்க்கைக்கும், இந்து தலித்துகளின் நடைமுறை வாழ்க்கைக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை என்றே கூறியுள்ளன.
இன்று பல மாநிலங்கள் மத ரீதியான இடஒதுக்கீட்டை உள் ஒதுக்கீடாக கொண்டுவந்துள்ளன.சில மாநிலங்கள் முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீட்டை கொண்டுவந்துள்ளன.ஏன் இவர்களுக்கு மட்டும் பாராபட்சம்?