குற்றவாளிகள் ஏன் பெரும்பாலும் அடித்தட்டு வர்க்கத்தில் இருந்தே வருகிறார்கள்?
சிறிய குற்றமோ அல்லது பெரிய குற்றமோ;அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி இல்லை இந்தியாவாக இருந்தாலும் சரி; குற்றவாளிகளை தேடும் பணி முதலில் ஆரம்பிப்பது அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் தான்.அமெரிக்காவாக இருந்தால் கருப்பர்கள் வாழும் பகுதிகளில் குற்றவாளிகளை தேடுவார்கள்.இந்தியாவாக இருந்தால் எங்காவது குப்பத்தில் தேடுவார்கள்.
ஏன்?குற்றவாளிகள் குப்பத்தில் தான் இருக்க வேண்டுமா?ஆமாம் போலிசின் உளவியல் அப்படித்தான் சொல்கிறது.
அதுபோல,இவர்கள் செய்யும் சிறு சிறு குற்றங்களுக்கும் கூட தண்டனை எப்படி இருக்கும் என சொல்லித்தெரிய வேண்டியதில்லை.சிறு திருட்டாக இருந்தாலும் சரி, அல்லது கொலைகுற்றமாக இருந்தாலும் சரி, அவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக உச்ச பட்சம் துன்புறுத்தப்படுவார்கள்.அதிகபட்சமாக ரவுடி என்று முத்திரை குத்தப்பட்டு எண்கவுண்டரில் கூட கொல்லப்படுவார்கள்.இவர்கள் தண்டனை பெரும் வகையில் குற்றங்கள் ஜோடிக்கப்படும்.
காவல்துறை ரெக்கார்டுகளில் தேடினாலும் சரி,அரசு புள்ளி விபரங்களிலும் சரி,பெரும்பாலும் குற்றவாளிகள் அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.காரணம் என்ன?இவர்கள் தான் மென்மையான இலக்குகள்!இல்லாதவர்கள் என்றால் எல்லாவகையிலும் இவர்கள் இல்லாதவர்கள்!பணக்காரர்கள்,அதிகாரவர்க்கத்தினர் அல்லது சமூகத்தில் பெரிய இடங்கள் எனக் கூறப்படுபவர்களை எல்லாம் குற்றத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இந்த சமூகம் பார்க்க பழகிகொண்டிருக்கிறது.
போலிஸ் ரெகார்டுகள் அல்லது அரசு புள்ளிவிபரங்கள் சொல்வதெல்லாம் உண்மையா?உண்மையில் குற்றவாளிகள் குப்பங்களில் இருந்து தான் வருகிறார்களா?உண்மை அதுவல்ல!
ஆதிக்க சக்திகளின் குற்றங்களை போலீசார் தொண்ணூறு சதவிகிதம்பதிவு செய்வதில்லை.அப்படியே பதிவு செய்யப்பட்டாலும் அந்த வழக்குகள் கோர்ட் படி ஏறாது.அப்படியே கோர்ட் படி ஏறினாலும் பெரும்பாலும் குற்றங்கள் நிரூபிக்கப்படுவதில்லை.அப்படியே குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும் அவர்கள் தண்டனை பெறுவது சந்தேகம்.அப்படியே தண்டனை பெற்றாலும் அவை ஒன்றும் குப்பத்து திருடனுக்கு வழங்கப்பட்ட அளவு கூட இருக்காது.மொத்தத்தில் அரசு இயந்திரங்கள் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக இருக்கும்.மீண்டும் போலீசார் குற்றவாளிகளை தேடி குப்பத்தை நோக்கி செல்வார்கள்!
‘பெட்டி’ திருடனிடம் காட்டும் அதிகாரத்தை இவர்கள் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் அதிகார, ஆதிக்க சக்திகளிடம் காட்டமாட்டார்கள்.தினந்தோறும் கோடிக்கணக்கில் வரி எய்ப்பு நடக்கிறது;கோடிக்கணக்கில் ஊழல் நடக்கிறது;கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு மோசடி நடக்கிறது.இவர்கள் செய்யும் கொலை,கற்பழிப்பு சம்பவங்களுக்கும் பஞ்சமிருக்காது!ஆனால் என்றாவதுதான் ஒரு வழக்கை பதிவு செய்வார்கள்;அது அன்றே நமது ஞாபக மறதியில் கரைந்து போகும்!
ஆதிக்க சக்திகள் செய்யும் குற்றங்கள் நம் கண்முன்னே தினந்தோறும் ஆயிரக்கணக்கில் நடக்கிறது.ஆனாலும் நாம் விலகிச் செல்கிறோம்.நம் ஞாபக மறதி ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாகவே இருக்கிறது. குப்பத்து மனிதனை குற்றவாளியாக்க நம் மனது பழகி கொண்டுவிட்டது.!
super article i appriciate you continue your work well done keep it up