மனிதர்கள் என்ற போர்வையில் …!

I oppose same caste Love marriage, says Kongu Vellala leader Ravikumar

கடந்த சில வருடங்களை திரும்பிப்பார்த்தால் புரியும், தமிழகம் எத்துணை பிற்போக்குத்தனமான தலைவர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்று! தலித்துகளை ஏமாற்றுவது, அவர்களின் உழைப்பை உறிஞ்சி சமூகத்தில் பெரிய கை-யாக வலம் வருவது எல்லாம் இன்னும் தொடரும் இறந்த காலம் என்றாலும்,   இதன் நவீன வடிவம்  தான் தலித்துகளுக்கு எதிராக அரசியல் செய்து அதிகாரம் பெறுவது அல்லது    தலித்துகளுக்கு எதிராக அரசியல் செய்து  தங்களை ஆதிக்க சாதிகளின் தலைவர்களாக   முன்னிறுத்துவது!

ஆதிக்க சாதி ஆண்கள், ஆதிக்க சாதிகளுக்கிடையே அல்லது தங்களைவிட  மேல்சாதி பெண்களை காதலித்தால் அது  உண்மை காதல்! இதையே ஒரு தலித் இளைஞர் செய்தால், அது  நாடக காதலாம் !அதாவது, தலித் இளைஞர்கள் , மேல்சாதி பெண்களை நாடக காதல் செய்து, அவர்களின் பெற்றோரிடம் இருந்து பணம் பறிக்கிறார்களாம் அல்லது பணத்தை குறிவைத்து  ரகசிய  திருமணம் செய்து கொள்கிறார்களாம்! இது டாக்டர் இராமதாஸ் போன்ற பிற்போக்குவாதிகளின் தொடர்ச்சியான குற்றச்சாட்டு !

பணத்திற்கு ஆசைப்பட்டு , சொத்துக்கு ஆசைப்பட்டு  திருமணம் செய்வது  எல்லாம்  ஆதிக்க சாதிகளில்  காலம் காலமாக உள்ள அடிப்படை பண்புகளில் ஒன்று! ஆதிக்க சாதிகளில் நடைபெறும் தொண்ணூறு  சதவிகித திருமணங்கள் பணம் மற்றும்  சொத்து அடிப்படையிலேயே    நடக்கிறது. இந்த பணம்,  சொத்து மற்றும் அதிகார, ஆதிக்க  வெறி இருப்பதாலேயே அவர்கள் ‘ஆதிக்க சாதிகள்’! இது அனைவருக்கும் தெரிந்த உண்மை !தலித் இளைஞர்கள் மேற்கூறிய காரணங்களுக்காக நாடக காதல்  செய்வதாக கூறுவதில் எந்தளவு உண்மை இருக்கிறது ?

மேல்சாதி  பெண்களை மயக்கி தலித் இளைஞர்கள் காதலிக்கிறார்கள் என்பதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன?  மேல்சாதி பெண்கள் எவ்வளவு  படித்திருந்தாலும் அவர்களுக்கு  சுய அறிவு குறைவு என்ற ஆணாதிக்க சிந்தனை! இந்த பெண்ணடிமைவாதிகள் தான்  தற்போது  “பெண்களின் பாதுகாப்பும், ஐ.நா., ஒப்பந்தங்களும்….தமிழ்நாட்டில் செய்ய வேண்டியது என்ன?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்துகிறார்களாம் . பயிரை மேயும் இந்த வேலிகள் (ஆணவக்கொலைகாரகள்) தான் பெண்களின் பாதுகாவலர்களாம் ! எவ்வளவு  பெரிய போலித்தனம் ?.

இருபதுகளில் உள்ள எந்த எந்த இளைஞருக்கும் காதல்  என்பது ஒரு மன அல்லது உடல் சார்ந்த எதார்த்த உணர்வு . சக மனிதனைப்போல எதார்த்தமாக வாழ்க்கையை நினைக்கும் தலித் இளைஞன்,   இந்த பிற்போக்குவாதிகளின்  கொடூரம் அறியாதவன். அவர்களுக்கு  ‘நாடகக் காதல்’ செய்யும் அளவுக்கு அனுபம் கிடையாது. சிலரை பணம், சொத்து மற்றும்  உடல் ரீதியாக  பயன்படுத்திக்கொள்ளும் ‘மேல்சாதி’ மனநிலை தலித்துகளுக்கு இருந்திருந்தால் அவர்கள் எப்போதோ மற்றவர்களைவிட  சமூக பொருளாதார ரீதியாக  முன்னேறியிருப்பார்கள்.ஆதிக்க மற்றும் மேல்சாதி பெண்ணை காதிலிப்பதோ  அல்லது திருமணம் செய்வதோ தலித் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவருவதில்லை. அதுவே  சமூக அடுக்கின் மேல்நோக்கிய நகர்வுக்கான(upward mobility) அடிப்படையும் இல்லை.அது ஒரு எதார்த்தமான வாழ்க்கை.

ஒருவர்  தன்னை விரும்புபவரை காதலிப்பது அல்லது திருமணம் செய்வது என்பது வாழ்க்கையின் எதார்த்தம். அதற்க்கு வேறெந்த ‘நாடக’ காரணமும் இருக்க அடிப்படையில்லை.அப்படி ‘நாடக’ காரணம்  இருந்தால், அது ஆதிக்க அல்லது மேல்சாதி கலாச்சாரமாகவோ அல்லது மனநிலையாகவோதான் இருக்க முடியும். அது நூறு சதவிகிதம் தலித் கலாச்சாரமோ அல்லது தலித் மனோநிலையோ  அல்ல.அது தனி நபர் மீதான மேல்சாதி அல்லது ஆதிக்க சாதியின் கலாச்சார தாக்கமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

தலித்துகள் உழைப்பாளிகள்  மட்டுமல்ல; மற்றவர்களால் பல காரணங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளப்படுபவர்கள்! வஞ்சிக்கப்படுபவர்கள்!எதிர்நிலையில் இருந்து , டாக்டர் இராமதாஸ் போன்றவர்கள்  ‘நாடக காதல்’ அரசியல் செய்வதற்கும்  தேவைப்படுகிறார்கள். தலித்துகளை காதல் திருமணம் செய்வது பிற்போக்கு ஆதிக்க சாதியினருக்கு கேவலமாக இருந்தால் , தலித்துகளுக்கு எதிராக அரசியல் செய்து அதிகாரம் பெற நினைப்பதும்  அதைவிட கேவலமானதல்லவா?

மனிதர்கள் என்ற போர்வையில் உள்ள  சில ஆதிக்க  மிருகங்கள் தங்களை காலம் காலமாக,  தங்களின் சுயநலத்திற்காக, உண்மைக்கு புறம்பாக , அவமானப்படுத்துவதை தெரிந்தே  தான்  தலித்துகள் தங்கள் வாழ்க்கையை  தினந்தோறும்  நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து எல்லோருடைய  வலியையும்  காலம் காலமாக  தாங்கும் அவனுக்கும்  தெரியும்! மாற்றம் ஒன்றே மாறாதது என்று!

Advertisements
பிரிவுகள்:Uncategorized

ஆண்டோர் ஆண்டிகளானால் ..!(ஒரு வரலாற்றுப் பார்வை )

நாங்கள் தான் உயர்ந்த சாதி!நாங்கள் வர்ணாசிரம அடுக்கில் பிராமணர்களுக்கு சமமானவர்கள்!இல்லை!இல்லை!நாங்கள் தான் உண்மையான சத்திரியர்கள்!நாங்கள் ஆண்ட பரம்பரை!நாங்கள் வைசியர்கள்!   பிரம்மாவுடனும், விஷ்ணுவுடனும்  கற்பனையாக தொடர்புபடுத்திக்கொண்டு,   மிகைப்படுத்திய வரலாறுகளை தங்கள் சாதிகளுக்கு என்று உருவாக்கினார்கள்!

இந்தக் கூத்தெல்லாம் நடந்தது  1872-ஆம் ஆண்டு முதல் 1931-ஆம் ஆண்டு வரையிலும் . எதற்காக?. எப்பொழுது முதன் முதலாக இந்தியாவில்  மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினார்களோ, அப்போதிலிருந்து 1931-வரை ஆங்கிலேய அரசு வர்ணாசிரம அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினார்கள்.ஒவ்வொரு சாதிக்காரர்களும் தங்களை மேலான வர்ணாசிரம அடுக்கில் வைக்கச் சொல்லி மனுக்கொடுத்தார்கள் .அவ்வாறு தங்களை மேலான வர்ணாசிரம அடுக்கில் சேர்க்க வேண்டும் என்றால், அவர்கள்  தங்கள் சாதி மக்களின் எண்ணிக்கை,மத ரீதியான கற்பனை வரலாறு, முதலானவற்றை  தெரிவிக்க வேண்டும்.கடைசியில், ஆங்கில அரசு அதிகாரத்தில் எப்பொழுதும்   ஒட்டிக்கொண்டிருந்த  பிராமணர்கள்,  யாரை எந்த வர்ணாசிரம அடுக்கில் வைக்கவேண்டும் என  ஆங்கிலேய அரசுக்கு  ஆலோசனை வழங்கினார்கள்.ஒவ்வொரு சாதியினரும் தங்கள் எண்ணிக்கையைக் கூடுதலாக காண்பிக்க,  தங்களின் சாதி மற்றும் கிளை சாதிகளை தேடி அலைந்தார்கள்.வெள்ளைக்காரர்கள் முன்பு தங்களை பிரமாண்டமாக காட்டிக்கொண்டார்கள். இதுபோன்ற உள்குத்துக்கள்   நடப்பதை அறிந்திராத பல சாதிகள் கீழான வருணாசிரம  நிலைக்கு சபிக்கப்பட்டார்கள்!

Image result for british india office photo

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான், சில ஆண்ட மிட்டா மிராசுகளுக்கு தங்களின் முதிர்ச்சியின்மை புரிய ஆரம்பித்தது. தங்களின் தனிப்பட்ட செல்வந்த நிலையோ அல்லது  மேம்பட்ட வருணாசிரம நிலையோ வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தில் அதிகாரம் பெற அல்லது தங்களின் அதிகாரத்தை   நீட்சி  செய்ய போதுமானதாக இல்லை என உணர்ந்தார்கள்.

மறுபுறம், வருணாசிரம   நிலை காரணமாக தொன்று தொட்டு  பிராமணர்கள் பெற்ற கல்வி, ஆங்கிலேய அதிகார மையத்தில் ஒட்டுமொத்தமாக குறிப்பிடத்தக்க அதிகாரம் பெற உதவியது. பிராமணர்கள் இந்த அதிகாரங்களை ஒரு குழுவாக சுய வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டதோடு,  வருணாசிரம அடுக்குகளை திடப்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்தினார்கள். பிராமணர்கள் வலுவான அதிகார மையமாக உருவானார்கள். மற்ற பிரிவினருக்கு பயனற்ற பிராமண அமைப்புகள் மற்றும் பிராமண அதிகார  வர்க்கத்தின் செயல்பாடுகள், பிராமணர்கள்- மற்றவர்கள் என்ற  கசப்பு நிலையை ஏற்படுத்தியது.

அதுவரை பொருளாதார காரணங்களுக்காக  அதிகார வர்க்கமான மிட்டா மிராசுகளை நாடி நின்ற பிராமணர்களை, மிட்டா மிராசுகள் நாடிச்செல்ல வேண்டிய கட்டாயம் ஆங்கிலேய  ஏகாதிபத்திய காலத்தில் ஏற்பட்டது.  தலைமுறை தலைமுறையாக  அதுவரை அதிகார கோலோச்சிய செல்வந்த மிட்டா மிராசுகளுக்கு இந்த நிலையை கையாள்வதில் இருந்த உளவியல்   சிரமம், பிராமணர்கள் மீது அதீத  கசப்பு உணர்வை வளர்த்தது.

அதுவரை தனது சாதியினரையோ, மற்றவர்களையோ பற்றி பெரிதும் கவலைப்படாத மிட்டா மிராசுகளுக்கு, தனது சாதியினரையும் மற்ற ஆதிக்க சாதியினரையும் ஒருங்கிணைத்து  பிராமண அதிகார அமைப்புகளுக்கு எதிராக போராட வேண்டிய கட்டாய   நிலையை ஏற்படுத்தியது .

முதிர்ச்சியில்லாமல் மேலான வர்ணாசிரம நிலையைப் பெறுவதை விட, தங்களை சூத்திரர்களாக அடையாளப்படுத்தி , கல்வி வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பெற்று, ஆங்கில அரசில் அதிகாரம் பெறுவதே எல்லாவகையிலும் பயனுள்ளது என மிட்டா மிராசுகள்ஆழம் பார்த்து காலை விட ஆரம்பித்தார்கள். மிட்டா மிராசுகள் ஆதிக்க சாதியினரை சூத்திரர்களாக  ஒருங்கிணைத்தாலும் ,பெரும்பான்மையானவர்களின் சமூக பொருளாதார நிலை, கல்வி- வேலைவாய்ப்பில் பிராமணர்களுடன் போட்டிபோடும் நிலையில் இல்லை. என்ன செய்தார்கள் ? கல்வி , வேலை வாய்ப்புகளில் பிற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டுவர ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசிடம் போராடி வெற்றி பெற்றார்கள். இது தான் இன்று ஆண்ட பரம்பரைகளாக சொல்லிக்கொள்ளும் பல ஆதிக்க சாதிகள் தென்னிந்தியாவில் சட்டப்பூர்வமாக    ஆண்டிகளான  கதையின் தொடக்கம்.

வரலாற்றுப் பார்வை தொடரும் …

பிரிவுகள்:Uncategorized

குற்றவாளிகள் ஏன் பெரும்பாலும் அடித்தட்டு வர்க்கத்தில் இருந்தே வருகிறார்கள்?

சிறிய குற்றமோ அல்லது பெரிய குற்றமோ;அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி இல்லை இந்தியாவாக இருந்தாலும் சரி; குற்றவாளிகளை தேடும் பணி முதலில் ஆரம்பிப்பது அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் தான்.அமெரிக்காவாக இருந்தால் கருப்பர்கள் வாழும் பகுதிகளில் குற்றவாளிகளை தேடுவார்கள்.இந்தியாவாக இருந்தால் எங்காவது குப்பத்தில் தேடுவார்கள்.

ஏன்?குற்றவாளிகள் குப்பத்தில் தான் இருக்க வேண்டுமா?ஆமாம் போலிசின் உளவியல் அப்படித்தான் சொல்கிறது.

அதுபோல,இவர்கள் செய்யும் சிறு சிறு குற்றங்களுக்கும் கூட தண்டனை எப்படி இருக்கும் என சொல்லித்தெரிய வேண்டியதில்லை.சிறு திருட்டாக இருந்தாலும் சரி, அல்லது கொலைகுற்றமாக இருந்தாலும் சரி, அவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக உச்ச பட்சம் துன்புறுத்தப்படுவார்கள்.அதிகபட்சமாக ரவுடி என்று முத்திரை குத்தப்பட்டு எண்கவுண்டரில்  கூட கொல்லப்படுவார்கள்.இவர்கள் தண்டனை பெரும் வகையில் குற்றங்கள் ஜோடிக்கப்படும்.

காவல்துறை ரெக்கார்டுகளில் தேடினாலும் சரி,அரசு புள்ளி விபரங்களிலும் சரி,பெரும்பாலும் குற்றவாளிகள் அடித்தட்டு வர்க்கத்தை  சேர்ந்தவர்களாகத்தான்  இருப்பார்கள்.காரணம் என்ன?இவர்கள் தான் மென்மையான இலக்குகள்!இல்லாதவர்கள் என்றால் எல்லாவகையிலும் இவர்கள் இல்லாதவர்கள்!பணக்காரர்கள்,அதிகாரவர்க்கத்தினர் அல்லது சமூகத்தில் பெரிய இடங்கள் எனக் கூறப்படுபவர்களை எல்லாம் குற்றத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இந்த சமூகம் பார்க்க பழகிகொண்டிருக்கிறது.

போலிஸ் ரெகார்டுகள் அல்லது அரசு புள்ளிவிபரங்கள் சொல்வதெல்லாம் உண்மையா?உண்மையில் குற்றவாளிகள் குப்பங்களில் இருந்து தான் வருகிறார்களா?உண்மை அதுவல்ல!

 ஆதிக்க சக்திகளின் குற்றங்களை போலீசார் தொண்ணூறு சதவிகிதம்பதிவு செய்வதில்லை.அப்படியே பதிவு செய்யப்பட்டாலும் அந்த வழக்குகள் கோர்ட் படி ஏறாது.அப்படியே கோர்ட் படி ஏறினாலும் பெரும்பாலும் குற்றங்கள் நிரூபிக்கப்படுவதில்லை.அப்படியே குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும் அவர்கள் தண்டனை பெறுவது சந்தேகம்.அப்படியே தண்டனை பெற்றாலும் அவை ஒன்றும் குப்பத்து திருடனுக்கு வழங்கப்பட்ட அளவு கூட இருக்காது.மொத்தத்தில் அரசு இயந்திரங்கள் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக இருக்கும்.மீண்டும் போலீசார் குற்றவாளிகளை தேடி குப்பத்தை நோக்கி செல்வார்கள்!

‘பெட்டி’ திருடனிடம் காட்டும் அதிகாரத்தை இவர்கள் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் அதிகார, ஆதிக்க சக்திகளிடம் காட்டமாட்டார்கள்.தினந்தோறும் கோடிக்கணக்கில் வரி எய்ப்பு நடக்கிறது;கோடிக்கணக்கில் ஊழல் நடக்கிறது;கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு மோசடி நடக்கிறது.இவர்கள் செய்யும் கொலை,கற்பழிப்பு சம்பவங்களுக்கும் பஞ்சமிருக்காது!ஆனால் என்றாவதுதான்  ஒரு வழக்கை  பதிவு செய்வார்கள்;அது அன்றே  நமது ஞாபக மறதியில் கரைந்து போகும்!

ஆதிக்க சக்திகள் செய்யும் குற்றங்கள் நம் கண்முன்னே தினந்தோறும் ஆயிரக்கணக்கில் நடக்கிறது.ஆனாலும் நாம் விலகிச் செல்கிறோம்.நம் ஞாபக மறதி ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாகவே இருக்கிறது.  குப்பத்து மனிதனை குற்றவாளியாக்க நம் மனது பழகி கொண்டுவிட்டது.!

பிரிவுகள்:சமூகம்

ஒவ்வொரு தமிழருக்கும் உள்ள கடன் எவ்வளவு?

தமிழக சட்டசபையில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து  நிதியமைச்சர் அன்பழகன் பேசியதாவது:

தமிழக சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் நேற்று முடிந்தது. அதற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:

தனிநபர் கடனை பொறுத்தவரை, மராட்டியத்தில் ஒரு நபருக்கு ரூ.18,575 ம், ஆந்திரத்தில் அது ரூ.16,494 ஆகவும், கர்நாடகத்தில் ரூ.15,103 ஆகவும், கேரளத்தில் ரூ.23,991 ஆகவும் உள்ளது. தமிழகத்திலோ அது ரூ.14 ஆயிரத்து 353 ஆக உள்ளது. இந்தியாவின் மொத்த கடன் பொறுப்பு ரூ.35 லட்சத்து 15,606 கோடியாகும்.

தனி நபர் கடனை பொறுத்தவரை இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 34,231 ரூபாய் கடன் உள்ளது. தமிழகத்தில் தனி நபர் கடன் பொறுப்பு மிகவும் குறைவாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே தமிழகம் கடன் நிலைமையில் மோசமாக இல்லை. இது தீர்க்க முடியாத கடனும் அல்ல. கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.

பிரிவுகள்:தகவல் பலகை

உலகம் மாவோயிஸ்டுகள் காணும் கனவை விட பெரியது

சத்திஸ்கார் மாநிலத்தின் தண்டேவாடா பகுதியில் எழுபத்தைந்து CRPF போலீசார் நக்சலைட்டுகளால் படுகொலை செய்யப்பட்டது, இந்தியா முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.நக்சல்களுக்கும்,பாதுகாப்பு போலீசாருக்கும் இடையே நடக்கும் சண்டையில் இரு தரப்பிலும் ஆட்கள் கொல்லப்படுவது அவ்வப்போது நடப்பது தான் என்றாலும், சமீபத்தில் கொல்லப்பட்ட போலிசாரின் எண்ணிக்கை அனைவரையும் உறையவைத்தது.அரசுத் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்க, பிரதமர்,உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புதுறை  வல்லுனர்களுக்குள் பலத்த விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.அதாவது இப்போதைய அரசின் வியூகம் பதிலடி கொடுப்பது என்பதையும்  விட,  நக்சல்களை மூன்று நான்கு வருடத்திற்குள் முற்றிலுமாக ஒழித்து விடுவது என்பதாக இருக்கிறது.உள்துறை அமைச்சர் சிதம்பரமும் இதனை நக்சல்களுக்கு எதிரான போர் என அறிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, இந்திய மாவோஸ்டுகள் 2050-ஆம் ஆண்டுக்குள் ஆயுதப் புரட்சியின் மூலம் மாவோஸ்ட் கம்யுனிச ஆட்சியை ஆட்சி அமைக்க விரும்புவதாக அறிவித்துள்ளார்கள்!ஆனால் உலகம் மாவோஸ்டுகள் காணும் கனவை விட பெரியது!

காரணம்! உலகம் ஜனநாயகம், மக்களாட்சி தத்துவங்களையே சிறந்ததாக கருதி வாழ பழகிகொண்டுவிட்டது!நேபாளில் கூட மாவோயிஸ்டுகளால் ஜனநாயக பாதையையே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம்!மாவோ சொன்னது போலவோ அல்லது மார்க்ஸ் சொன்னது போலவே ஒரு ஐடியல் கம்யுனிச சமுதாயத்தை அமைக்க முடியாது.உலகில் இதுவரை இருந்த கம்யுனிச அரசுகளும் முழுமையாக அவர்களின்  சிந்தாந்தப் படி அமையவும் இல்லை!ரஷ்யா முதற்கொண்டு ஐரோப்பாவிலிருந்த கம்யுனிச நாடுகளினால் கூட கம்யுனிச சித்தாந்தத்தை தொடர முடியாமல் ஜனநாயகப் பாதைக்கு திரும்பிவிட்டார்கள்.கம்யுஸ்ட் ஆட்சி பல நாடுகளில் உருவானாலும் கூட அவற்றின் நிலைத் தன்மை கேள்விக்குறியது.சீனாவில் ஒரு கட்சி கம்யுனிச ஆட்சி இருந்தாலும், அங்கும் சமத்துவம் இல்லை.ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.மனித உரிமை பற்றி அங்கு பேசவே கூடாது.அரசு அதிகாரிகளிடையே ஊழலுக்கும் பஞ்சமில்லை.எனவே கம்யுனிச அரசு என்பது அடிப்படையில் ஒரு கட்சி ஆட்சி என்பதை  தவிர நடைமுறையில் மற்ற நாடுகளைப் போல தான். அதுவும் நக்சல்கள் அவர்கள் கூறுவதை போல 2050-இல் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தாலும், காலப்போக்கில் ஒன்றும் பெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை!அப்போதும் ஏழைகள் இருப்பார்கள், முதலாளிகள் சுரண்டிக்கொண்டே தான் இருப்பார்கள்! என்ன கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்!.அவ்வளவு தான்!

நக்சல்களின் பெரிய பலம்! நக்சல்கள் பிரச்சினை என்று வரும்போது மக்களுக்கு உருவாகும், அவர்கள் செய்வது சரியா? தவறா? என்ற குழப்பமான மனநிலை!பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக எழும் ஒருமித்த கருத்து அல்லது ஆவேசம்  இந்தியாவில் நக்சல்களுக்கு எதிராக எழுவதில்லை!காரணம்!அவர்கள் தங்களை யாருடைய பிரதிநிதிகளாக காட்டுகிறார்களோ அந்த மக்களின் உண்மை நிலை நம்மை சுடுகிறது!நமக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது!

எங்கெல்லாம் மாவோஸ்டுகள் குறிப்பாக வளர்ந்திருக்கிறார்கள்?.அரசுகளின் மெத்தனப் போக்கினால்,பாராமுகத்தால் எங்கெல்லாம் வறுமை தலைவிரித்தாடுகிறதோ,எங்கெல்லாம் முதலாளிகள்,கந்துவட்டிக்காரர்கள்  மற்றும் அரசு அமைப்புகளால் விளிம்பு மனிதர்கள் வஞ்சிக்கப்படுகிறார்களோ அல்லது சுரண்டப் படுகிறார்களோ அங்கெல்லாம் நக்சல்கள் வளர்ந்திருக்கிறார்கள்! அதை அரசுகள் முதல் சமூகவியலாளர்கள் வரை அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.நக்சலிசம் உருவாக கூறப்படும் அனைத்து காரணங்களும் மறுக்க முடியாதவை.அரசுகள் முதலாளிகளுக்கு  முன்னுரிமை கொடுப்பதற்காக ஏழைகளை, பழங்குடிகளை காலம் காலமாக வஞ்சித்து வருகிறார்கள் என்பதும் வெட்கப்பட வேண்டியது  தான். நக்சல்கள் வளர்ந்த பகுதிகள் காலம் காலமாக வளர்சிப்பனிகளில் இருந்து புறக்கணிக்கபட்டன என்பதும் நூறு சதவிகிதம் மறுக்க முடியாதது தான்! 

நக்சல்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்!இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை, அடிப்படையில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்டவை! என்ன!நக்சல்கள் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்.அவர்கள் ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் வளரும் போது கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன்  காப்பாற்ற முடியவில்லை.காரணம் நடைமுறை அரசியல் கொஞ்சம் கடினமானது!கடைசியில் நம்மால் அடித்தட்டு வர்க்கத்திலிருந்து சில முதலாளிகளை உருவாக முடிந்ததே தவிர ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்!இதில் உங்களுக்கும் விதிவிலக்கிருக்கப் போவதில்லை!ஆனால் ஜனநாயகத்தில் ஒருவரால்  வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கவும் முடியும்.இல்லை என்றால் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவாவது முடியும்!

எத்தனையோ தலைவர்களை நாம் உண்மையான சமூக புரட்சியாளர்களாக நம்பியிருக்கிறோம்.கடைசியில் அவர்களெல்லாம் தங்களது சாதிக்குள் அல்லது சாதி அடையாளத்திற்குள் கரைந்து போயிருக்கிறார்கள் அல்லது சாதி அபிமானிகளால் கரைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வரலாறு!

அதிலும் இந்திய சமுதாயம் ஐரோப்பிய சமுதாயம் போல ஏழை, பணக்காரன் என்ற கட்டமைப்பை கொண்டதல்ல;இது சாதிய வலைப்பின்னலாளான  முரண்பாடுகளின் மொத்த உருவம்.இதில் சோதனை முயற்ச்சிகள் வேதனையைத் தான் தரும்.
 
எனவே! நக்சல்கள் ஆயுதப் புரட்சியைக் கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புவதே நல்லது!
படைவீரர்கள் கொல்லப்பட்டாலோ அல்லது காயம்பட்டாலோ அவர்கள் குடும்பத்தினை பாதுகாக்க அரசு இருக்கிறது.ஆனால் நக்சல்களின்  வன்செயல்களுக்கு பதிலடி கொடுக்க பொலிசாரால் துன்புறுத்தப்படும் அல்லது கொல்லப்படும் உறவினர்களுக்கு அல்லது ஆதரவாளர்களை பொருளாதார ரீதியாக பாதுகாக்க யார் இருக்கிறார்கள்?
பிரிவுகள்:சிந்தனை

கருணாநிதி செய்தது சரியா?தொடர்ந்து ஏமாற்றப்படும் தலித் கிறிஸ்தவர்கள்

தலித் கிறிஸ்தவர்கள் தங்களை  தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும் என கடந்த அறுபது ஆண்டுகளாக  அரசியல் மற்றும் சட்டபூர்வமான  போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.தொடர்ச்சியாக அதிகமான ஏமாற்றங்கள்! ஏராளமான வலிகள்!  இருந்தும் மனவலிமையுடன் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.408  கோடி ஆகும்.அதாவது மொத்த இந்திய மக்கள் தொகையில் 2.34%.அதில் இந்தியா முழுவதும் 1.6 கோடி தலித் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.அதாவது ஏறக்குறைய 66% சதவிகிதம் பேர். இந்திய கிறிஸ்தவ மதம் சாதி முறையை போதிப்பதில்லை  என்றாலும் நடைமுறையில் ஜாதிய முறைகளையே பின்பற்றுகிறது.இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை என்னவோ, அதே தான் கிறிஸ்துவ மதத்திலும் அவர்கள் நிலை.

வரலாற்று பூர்வமாக, இந்து மதத்தில் உள்ள இழிநிலையில் இருந்து தங்களை காத்துக்கொள்ளவே  தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் கிறித்துவத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும்  மாறினார்கள்.ஆனால் அங்கும் அவர்களின் சமூக,பொருளாதார மற்றும் கல்வி நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.தீண்டாமை என்ற இழிநிலைக்கு அங்கும் விடுதலை இல்லை.

தலித் சீக்கியர்கள் 1956-ஆம் ஆண்டும், தலித் புத்த மதத்தினர் 1990-ஆண்டும், தாழ்த்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டார்கள். காரணம்! புத்த மதமும், சீக்கிய மதமும் இந்துமதத்தில் இருந்து தோன்றியவை என்பதால் இங்குள்ள தலித்துகளின் கோரிக்கைகள் காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.ஆனால் தலித் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் இதுவரை பாராபட்சம்.காரணம்!கிறிஸ்துவமதம் அடிப்படையில் சாதியம்(வர்ணாசிரம தர்மம்) போதிப்பதில்லை;ஆனால் சமத்துவத்தை வலியுறுத்துகிறது.அடிப்படையில் இதன் தோற்றமும் இந்தியா அல்ல என்பதும் ஒரு காரணம்.

சங்க பரிவாரங்கள் தலித் கிறித்துவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்ப்பதற்கு காரணம், அது இந்து மதத்திலிருந்து மத மாற்றத்தை இன்னும் வேகப்படுத்தும் என்ற பயமே!

கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள தென்னிந்தியாவிலும், ‘மதசார்பற்றவர்கள்’ என மார்தட்டிக்கொள்ளும் அரசுகள் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை. ஒரே ஒரு சலுகை, அதாவது கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும்(தலித் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் அடக்கம்) பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் நீண்டகாலமாக இணைக்கப்பட்டுள்ளார்கள்.

மத்திய அரசும் இவர்களை 1993-ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% சதவிகித இடஒதுக்கீட்டில் இணைத்துள்ளது.இருந்தும் இதில் யார் அதிகம் பயன்பெறுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.பி.ஜே.பி-யையும், காங்கிரசையும் தவிர மற்ற தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் அனைத்தும் தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளன.ஆனாலும் அனைத்துக் கட்சிகளும் இதில் வேகம் காட்டவில்லை எனபதும் உண்மை.

தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தலித் கிறிஸ்தவர்கள்.தி.மு.க. அரசு கிறிஸ்தவர்களுக்கு 3.5% சதவிகித இடஒதுக்கீடு கொண்டுவந்தபோது  கிறிஸ்தவர்களில் உள்ள ஒரு ஆதிக்க பிரிவினர் தாங்கள் ஏற்கனவே 3.5%சதவிகிதத்திற்கும் அதிகமான வாய்ப்புகளைப் பெறுவதால் பிற்படுத்தப்பட்ட பிரிவிலேயே இருக்கிறோம் என கூறிவிட்டனர்.ஆனால் முதலமைச்சர் கருணாநிதி என்ன செய்திருக்கலாம்?அதில் ஒரு இரண்டு சதவிகிதமாவது தலித் கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்கி இருக்கலாம்.மதரீதியான இடஒதுக்கீடு வழங்குவது என முடிவாகிவிட்ட நிலையில் தாழ்த்தப்பட்டவர்களில் அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு இருப்பதைப்போல தலித் கிறிஸ்துவர்களுக்கு அந்த 3.5% சதவிகிதத்தில் ஒரு இரண்டு சதவிகிதமாவது வழங்கி இருக்கலாம்.இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரியாக இருந்திருக்கலாம்! ஒரு நல்ல வாய்ப்பை நழுவவிட்டு விட்டார்கள்!

 

பிரிவுகள்:சமூகம் குறிச்சொற்கள்:

ஏழைகள் வயிர் எறிந்தால் ஐயோ எனப் போவார்கள் !

கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதாரம் மந்தம் என்றார்கள்!இப்போது பொருளாதாரம் மீட்சியடைந்திருப்பதாக கூறுகிறார்கள்.ஆனால் இந்த இரண்டு சூழலிலும் உணவுப்பொருட்களின் விலை மட்டும் ஏழைகளுக்கு எட்டாத உயரத்தில்!ஏழைகளின் நிலை எப்போதும் போல் போராட்டம் தான்!
உணவுப் பொருட்களின் விலைவாசி  20 சதவிகித அளவிற்கு உயர்ந்து தற்போது 16.25 புள்ளிகள் அளவிற்கு குறைத்துள்ளது.நடைமுறையில் எந்த ஒரு பொருளின் விலைவாசியிலும் பெரிய மாற்றங்கள் இல்லை.
இது இன்று நேற்றல்ல;கடந்த சில வருடங்களாகவே நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலைவாசி ஏறுமுகமாகத் தான் உள்ளது. 
விவசாயிகளுக்கு அறுபதாயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தால் ‘குய்யோ முறையோ’ என்று பத்திரிகைகளில் கதறுவார்கள்.அரசுக்கு  பற்றாக்குறை குறித்து அக்கறை இல்லை என்பார்கள்!பல மாதங்களுக்கு தொடர்ச்சியாக தலையங்கங்கள், கட்டுரைகள் தீட்டுவார்கள்.ஆனால் தொழிலதிபர்களுக்கு பல இலட்சம் கோடிகள் அளவுக்கு வரிவிலக்குகள்,பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் குறைந்த விலையில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் என வாரி வழங்கினாலும் போதாது என்பார்கள். இது போக வருமான வரி, சுங்கம் மற்றும் கலால் வரி  ஏய்ப்புகள்     என்ற பெயரில் பல இலட்சம் கோடிகள் மோசடி வேறு.முதலாளி வர்க்கத்திற்கு கடன் கொடுப்பதற்கு அரசுகள் வங்கிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது.ஏழைகள் என்ன செய்வது?ஏழைகளை வங்கி ஊழியர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.கடைசியில் ஒரே வழி இந்தப் பணக்கார ஏழைகளுக்கு கந்து வட்டிக்காரர்கள் என்றுமே மீள முடியாத வட்டிக்குக் கொடுப்பார்கள்! 
ஏழைகளுக்கு கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் ஜவகர் நகர்புற வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் சில பல இலவசத் திட்டங்கள் ! பிறகும் ஏழைகளின் வாழ்வில் எந்த மாறுதலும் இல்லை!இந்த திட்டங்கள் இல்லாமல் இருந்தபோது இருந்த நிலையை விட ஏழைகளின் நிலை இன்னும் மோசமாக உள்ளது.காரணம் விலைவாசி உயர்வு!
அதிலும் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் இன்னும் கொடுமையானது!இந்தத் திட்டங்களால் பிற தொழில்களுக்கு செல்லும் தொழிலாளர்களின் கூலி உயர்ந்து கிராமப்புற நடுத்தர குடும்பங்களையும் நடுத்தெருவுக்கு வர வைத்துள்ளது.ஒட்டுமொத்தமாக சராசரி ஏழைகளின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது!இலவசத் திட்டங்களால் ஏழ்மை ஒழிந்து விடாது.அது ஏழைகளை கடைசிவரை அரசுகளை எதிர்நோக்கும் ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்கும்.

அரசுகளால்  முதலாளிகளை பொருளாதார சிக்கலிலிருந்து மீட்க முடிகிறது.ஆனால் கோடிக்கணக்கான ஏழைகளைப் பாதிக்கும்  உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை குறைக்க வழி தெரியவில்லை.கொழுத்துப் போகும் முதலாளிகளுக்கு அரசுகள் என்றும் துணையாக இருக்கும்!காரணம் அவர்களிடம் ஓட்டுக்கள் இல்லை!ஆனால் ஓட்டை விலைகொடுத்து வாங்க பணம் இருக்கிறது! 

ஏழைகள் வயிறெரிந்தால் ஒரு நாள் ஐயோ எனப் போவார்கள்!

பிரிவுகள்:சிந்தனை குறிச்சொற்கள்: